வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நாளை இ.போ.ச, தனியார் பேரூந்துகள் சேவையில்?

280

 
வடமாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் கடந்த (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கு மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந் நிலையில் வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இன்று (03.01.2018) முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது 40:60 என்ற பங்கீட்டு முறையில் சேவையை முன்னெடுப்பதற்கு வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை சம்மதித்தமை குறிப்பிடத்தக்கது

புதிய பேரூந்து நிலையத்தினை தனியார், இ.போ.ச என இரண்டாக பிரித்து தரும் படசத்தில் நாங்கள் செல்ல தயார் என இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று (03.01.2018) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சிரேஸ்ட செயலாளர் வியஜலட்சுமி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் நாளைய தினம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தங்களது சேவையினை மேற்கொள்ள இரு தரப்பினர்களும் சம்மதம் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

புதிய பேரூந்து நிலையத்தில் உள்ளுர் சேவைகள் வெளியூர் சேவைகள் என இரு கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் உள்ளுர் சேவை கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடும் என மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா இ.போ.சபையினரிடம் வினவிய போது, எங்களின் ஊழியர்களுடன் நாளை காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்று அதில் எடுக்கப்படும் முடிவின்படியே செயற்படுவோம் எனவும் பேரூந்து நிலையத்தினை இரண்டாக பிரித்து தராதவிடத்து செல்வது பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தினரிடம் வினவிய போது, புதிய பேரூந்து நிலையத்தினை சங்கிலி , பூச்சாடி , வேலியடைத்து பிரிப்பதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டோம் எனவும் இவ்வாறு இருக்க உள்ளுர் சேவை கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபட தயார் என தெரிவித்தனர்.