வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து அரச, தனியார் பேரூந்துகள் சேவையில் : மீண்டும் முறுகல்நிலை!!

706

 
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் இன்று (04.01.2017) நான்காவது நாளாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் இன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன்,

நேற்று வட முதலமைச்சருடன் இடம்பெற்ற கூட்டத்திற்கு அமைய இன்று இரு தரப்பினரும் புதிய பேரூந்து நிலையத்திற்கு அழைக்கப்பட்டு ஒர் தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

புதிய பேரூந்து நிலையத்தில் உள்ளுர் சேவைகள், வெளியூர் சேவைகள் என இரு கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் உள்ளுர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் சேவைகளும் என பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு இந்நடைமுறை செயற்படுத்தப்படுவதுடன் அதன் பின்னர் இரு தரப்பினரும் இணைந்து வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து வெளியூர் சேவைகளும் உள்ளுர் சேவைகள் கட்டிடத்திலிருந்து உள்ளுர் சேவைகளும் இடம்பெறுமென தெரிவித்தார்.

இதன் போது இ.போ.ச சபையினருக்கும் வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதனுக்கும் இடையே பேரூந்து நிலையத்தினை இரண்டாக பிரிப்பதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன

பின்னர் வவுனியா இ.போ.ச சபையினர் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையாற்ற சம்மதம் தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து தங்களது சேவையினை தொடர்ந்துள்ளனர்.

மாலை 4 மணியளவில் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்ற சமயத்தில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கிடையே சிறு வாய்த்தகராறு ஏற்பட்டது .

அதனையடுத்து 119 அவசர இலக்கத்திற்கு அழைத்து தனியார் போக்குவரத்து ஊழியர்கள் முறையிட்டமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.