யாழில் சிறுமி துஸ்பிரயோகம் : தலைமறைவாகிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு!!

248
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 5 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நபருக்கு நேற்று தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

குறித்த நபரை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்திய போது அவருக்கு தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

இதன்படி குற்றவாளிக்கு 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை 09.01.2018 (நேற்று) தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 2007ஆம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று சந்தேகநபர்கள் இருவக்கு எதிராகவும் யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் நிறைவில், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக முதலாவது எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையையும், அவருக்கு உதவிய குற்றத்துக்கு இரண்டாவது எதிரிக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, இரண்டாவது எதிரியான சாவகச்சேரி, கச்சாயைச் சேர்ந்த கனகரத்தினம் கமலதாஸ் (குட்டி) தலைமறைவாகியதால் அவரை கைது செய்ய பொலிஸாருக்கு மேல் நீதிமன்று கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் 3 ஆண்டுகளின் பின் இரண்டாவது எதிரியான கனகரத்தினம் கமலதாஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதையடுத்து குறித்த நபருக்கு நேற்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குற்றவாளி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

இதில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வாசித்தார். “குற்றவாளிக்கான 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை 09.01.2018 தொடக்கம் நடைமுறைக்கு வருகின்றது.” என நீதிபதி உத்தரவிட்டார்.