வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அகற்றல் : கடை உரிமையாளர்கள் தவிப்பு!!

940

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அடங்கலாக 15 கடைகள் அகற்றப்பட்டமையால் தாம் பாதிப்படைந்துள்ளதாக அப் பகுதியில் வியாபாரம் செய்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குழுமாட்டுச் சந்திப் பகுதியில் நாம் வியாபாரம் செய்து வருகின்றோம். நாம் மாதாந்தம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு நிலவாடகைப் பணமும் செலுத்தி வருகின்றோம். இதையே நம்பி எமது குடும்பம் இருக்கிறது.

இந் நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பொலிசாருடன் வந்த பிரதேசசபை உத்தியோகத்தர்கள் எமது மீன்களையும் கடைத் தளபாடங்களையும் கொண்டு சென்றதுடன், கடைகளையும் புடுங்குமாறு பணித்தனர். இதனால் தற்போது வியாபாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எமக்கு மாற்றிடம் என்றாலும் தரவேண்டும் எனத் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகளில் விசேடதேவைக்குட்பட்டோர், கணவனை இழந்தோர் எனப் பலரும் அடங்குகின்றனர். இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம் அவர்களைக் கேட்டபோது, இப் பகுதி வர்த்தகர்களை வெளியேறுமாறு கடந்த ஒருவருடத்திற்கு மேலாக அவர்களிடம் கூறி வருகின்றோம்.

அவ் வியாபாரம் நடைபெறும் பகுதி முச்சந்தி ஆகையால் விபத்துக்கள் சில நடந்தன. இதனால் இக் கடைகளை அகற்றுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அதனாலேயே வெளியேறுமாறு கூறியிருந்தோம். கடைகளை அவர்களே கழற்றினார்கள். நான் இல்லாத நேரம் எமது சபை வருமானபரிசோதகர் சென்று அவர்களுடைய தளபாடங்களை ஏற்றி வந்துள்ளார்.

அவற்றை நாம் மீள உரியவர்களிடம் வழங்கியுள்ளோம். தவறான புரிந்துணர்வே இதற்கு காரணம் எனத் தெரிவித்தார். இதேவேளை, அவர்கள் வேறோர் இடத்தில் வியாபாரம் செய்ய ஆதரவு வழங்கப்படும் எனவும் கூறினார்.

-பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5