தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி : வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!

257

B

இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சௌதாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

3வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் தோனி 50 ஓட்டங்களுடனும், முகமது ஷமி 4 ஓட்டங்களுடனும் 4வது நாள் ஆட்டடத்தைத் தொடர்ந்தனர்.

தோனி மேற்கொண்டு ஓட்டங்கள் ஏதும் குவிக்காமல் வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணித்தலைவர் குக் பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக, ஃபாலோஓன் முடிவைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க முடிவு செய்தார்.

2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ராப்சன் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கேரி பேலன்ஸ், அலெஸ்டர் குக் உடன் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக ஆடிய பேலன்ஸ் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் களம்புகுந்த இயன் பெல் 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அடுத்து வந்த ஜோ ரூட் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். குக், ஜோ ரூட் இருவரும் அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக்கொள்ளவதாக தெரிவித்தது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இமாலய இலக்கை அடையும் முனைப்பில் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் 12 ஓட்டங்களிலும், புஜாரா 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி நான்காம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரோகித் 6, ரஹானே 18 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்றைய 5ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடவேண்டியுள்ளதுடன், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்புகள் மிக அதிகமாக காணப்படுகின்றது.