வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 14,603 குடும்பங்களைச் சேர்ந்த 51,495 பேர் பாதிப்பு!!

512

Varatchi

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற வறட்சியினால் ஐந்து இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் வறட்சியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் எட்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 14,603 குடும்பங்களைச் சேர்ந்த 51,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சி காரணமாக விவசாய செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 21,000 ஹெக்டேயர் வயல் நிலங்களில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு பிரதேச சபைகளும் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவும் இணைந்து நிவாரணங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அது போதுமானதாக இல்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நீர்த் தேக்கங்களில் நீர் வற்றியுள்ளமையால் நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 32,554 குடும்பங்களை சேர்ந்த 1,22,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் குடிநீர் வசதிகளின்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயம் மற்றும் தோட்ட பயிற்செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவி வருகின்றது.
வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 64 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த 21,294 குடும்பங்களைச் சேர்ந்த 74,884 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காரணமாக பிரதேசத்திற்கு நீரை வழங்குகின்ற இரணைமடு குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. விவசாய செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லமுடியாத நிலைமையே காணப்படுவதாகவும் தமக்கு நிவாரணம் வழங்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பவுசர்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அந்த குடிநீர் போதுமானதாகவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 16,576 குடும்பங்களை ச்சேர்ந்த 56,469 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயல் நிலங்கள் மற்றும் தோட்ட நிலங்கள் நீரின்மையால் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன.

அண்மையில் குறித்த பகுதியிலில் கிடைத்த மழை வீழ்ச்சி வறட்சியைத் தணிக்க போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 20,928 குடும்பங்களைச் சேர்ந்த 76,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமானவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் 71,479 குடும்பங்களைச் சேர்ந்த 2,52,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதுடன் மக்களின் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 131 குளங்களில் 120 குளங்கள் முற்றாக நீர் வற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமல சேவைகள் ஆணையாளர் குறிப்பிட்டார். இதன் காரணமாக 12,000 நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 10,180 குடும்பங்களைச் சேர்ந்த 31,278 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு குடிநீருக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வருவருகின்றது.

விவசாயம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 36,882 குடும்பங்களைச் சேர்ந்த1,28,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதால் கால்நடைகள் நீர் அருந்த முடியாத நிலை காணப்படுகின்றது.

மலையகத்தின் சில மாவட்டங்களில் வரட்சி நிலவியுள்ளதுடன், பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் வறட்சியால் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியால் வட மேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.