6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!!

306

Ind

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டி ரத்தானதையடுத்து இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 133 அணி ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடைபெற்றது . நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரகளாக அணித்தலைவர் அலஸ்டர் குக், அலெக்ஸ் ஹால்ஸ் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஓட்டங்களை மெதுவாக உயர்த்தினர்.

அணித்தலைவர் குக் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அலெக்ஸ் ஹால்ஸ் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்கின. இயன் பெல் (28), ஜோ ரூட் (2), இயன் மோர்கன்(10), ஜோஸ் பட்லர் (42), பென் ஸ்டோக்ஸ்( 2), கிறிஸ் வோக்ஸ் (15), ஜேம்ஸ் டிரெட்வெல்( 30), ஸ்டீவன் ஃபின் (6 ) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியா தரப்பில், அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார், முகமது சமி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அஜின்கியா ரஹானே 45 ஓட்டங்களும், விராட் கோலி 40 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 64 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 42 ஓட்டங்களும் எடுத்தனர்.