பிரியாணிக்கு அனுமதி இல்லை : தோனி கடும் கோபம்!!

238

Dhoni

வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிராண்ட் ககாடியா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.ஹைதராபாத்தில் பிரியாணி மிகவும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தனது வீட்டில் இருந்து பிரியாணி தயாரித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அம்பத்தி ராயுடு மும்பை அணியில் விளையாடுவதால் அவர் புதன்கிழமை ராய்ப்பூரில் இருந்துள்ளார். எனவே அவரது வீட்டில் இருந்து பிரியாணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ககாடியா ஹோட்டல் விதிமுறைப்படி வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளை ஹோட்டலுக்குள் வைத்து சாப்பிட அனுமதி கிடையாதாம். ஆனால் இந்திய அணியின் தலைவர் தோனி இரசிகர்களின் ஆதர்ஷ நாயகன் என்பதால் தங்களது விதிமுறையை சற்றே தளர்த்தி பிரியாணி சாப்பிட அனுமதி கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம்.

அதே நேரம், தங்களது அறைகளில் பிரியாணியை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றும் வேறு எங்கும் வைத்து சாப்பிட கூடாது என்றும் ஹோட்டல் நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அதிலும் குறிப்பாக தோனி, சாப்பாட்டுக்காக ஒதுக்கப்படும் பகுதியில் தங்களை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்க ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக ஹோட்டலை காலி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், என்ற மற்றொரு நட்சத்திர ஹோட்டலுக்கு இடம் பெய்ந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கிளம்பியதும், இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகிகளும், அதே ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்துவிட்டனராம். இதுகுறித்து கிராண்ட் ககாடியா ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும், பிசிசிஐ தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஹோட்டலை காலி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அதே நேரம், காலி செய்ய என்ன காரணம் என்பதை நாங்கள் சொல்வதைவிட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து கிரிக்கெட் சபை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஹோட்டலை காலி செய்ய பிரியாணி ஒரு காரணம் கிடையாது. அந்த ஹோட்டலின் சேவையில் எங்களுக்கு திருப்தியில்லாதது காரணம் என்று கூறினார்.