ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா -2014!!

349

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் 2014 ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலர் இ.குருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பிரதேச பண்பாடுகளை பேணிப்பாதுகாப்பதும், பிரதேச கவிஞர்கள், கலைஞர்களை ஊக்குவித்து வெளிக்கொணர்தலே நோக்கமாகும். வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உவைஸ் பாருக் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான கௌரவங்களும் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சந்தியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் பிரதேச செயலகத்தை வந்தடைந்ததும் பண்பாட்டுக் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. கற்சிலைமடு அதிபர் நாகேந்திரராசா அவர்களும் கலைஞர் வேதவனம் அவர்களும் நிகழ்வை தொகுத்து வழங்கியிருந்தனர். ஒட்டுசுட்டான் இ.த.க. பாடசாலை அதிபர் திருமதி வே. நித்தியகலா வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்விற்கான பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முதன்மை விருந்தினராக முல்லை மாவட்ட அரச அதிபர் திரு வேதனாயகம் அவர்களும் கலந்து கொள்ள மேலும் விருந்தினர்களாக மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உஸா சுபலிங்கம் அவர்களும் பொறியியளாளர் செந்தூரனும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரதாபனும், வெலியோயா பிரதேச செயலரும், முல்லை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் கனகரத்தினமும்,கவிஞர் சமரபாகு சீனா உதயகுமாரும் வருகை தந்திருந்தனர்.

குடமூதற் கும்மி, கோலாட்டம், அருவிச் சிந்து, குதிரையாட்டம், இன்னியம், கோவலன் கூத்து, காத்தான் கூத்து, பண்டாரவன்னியன் நாடகம் என்பன முக்கியமாகக் காணப்பட்டன. அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபனின் தலைமையில் ”முத்தெழில்” எனும் பிரதேச பண்பாட்டு மலரும் வெளியிடப்பட்டது. மலருக்கான நூலாய்வினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் அருந்தாகரன் நிகழ்த்தினார்.

பிரதேச செயலக மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதால்.. மக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான இடைவெளி குறைக்கப்பட்டது எனலாம். சுமாராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதால் மாலை நேர மழையும் கருத்திலெடுக்கப்பட்டிருக்கலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்திருந்ததுடன் இரவு நேரம் இட்டலியுடன் சாம்பார் சம்பல் என பிரதேச மக்களே பிரதேச செயலகத்தில் வந்தமர்ந்து உணவுண்டதும் பார்க்க மகிழ்ச்சியான விடயமாக இருந்தது.

இதில் விருப்பப்படக்கூடிய விடையம் என்னவென்றால் இரவு ஓரு மணியாகியும் கூத்தாட்டம் பார்க்கப் பெரும் மக்கள் குவிந்திருந்ததேயாகும். எது எப்படி இருப்பினும் ஒட்டசுட்டான் பிரதேசத்திற்கென ஒரு கலாசார மண்டபம் இனிவரும் காலத்தில் அவசியம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடையமாகும்.

-முல்லைத் தீபன்-

1 2