வவுனியாவில் மின்னல் தாக்கத்தில் உடைமைகளை இழந்த மாணவனுக்கு உதவி!!

282

வவுனியா, பொன்னாவரசன் குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில், வீட்டு உடமைகளை முழுமையாக இழந்து கற்றலுக்கு எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்ந்த மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா பாடசாலையொன்றில் தரம் 7ல் கல்விகற்கும் எஸ்.கஜன் என்ற குறித்த மாணவனுக்கு வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த உதவிகளை வழங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறித்த சிறுவனின் வீட்டின் மீது மின்னல் தாக்கியதால் வீடு முழுமையாக எரிந்தது. யுத்தத்தினால் பெற்றோரை இழந்த குறித்த சிறுவன் தனது அம்மம்மாவின் தயவிலேயே வசித்து வருகின்றான். சம்பவ தினத்தன்று வேலை நிமித்தம் அம்மம்மா வெளியில் சென்றமையால் சிறுவன் அயல் வீட்டில் தங்கியுள்ளான். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனர்த்தம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிறுவனின் நிலை கண்டு தமிழ் விருட்சம் சமூக ஆவர்வலர் அமைப்பிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அம் மாணவனுக்கான உடைகள், உலர் உணவுப்பொருட்கள், பாடசாலை புத்தகப்பை மற்றும் பாடசாலை கொப்பிகள் என்பன வழங்கப்பட்டன.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பானது, சிற்றி வர்த்தக நிலைய உரிமையாளர் ஆ.சபாநாதன் உதவியுடன் உடுபுடவைகளையும், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் புத்தகப் பையினை வர்த்தகர் ந.சுந்தரதாசனின் உதவியுடனும் கற்றல் உபகரணங்களை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்த செ.சந்திரகுமாரின் உதவியுடனும் சேகரித்து இன்று கையளித்தது.

இந்நிகழ்வில், வர்த்தகர் ஆ.சபாநாதன், வர்த்தகர் ந.சுந்தரதாசன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், கோ.ரூபகாந் மற்றும் சமூக ஆர்வலர் சர்மிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
DSCN2574v

v1

v2

v3