வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் காலமானார்!!

1107

Sivapaalan

வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்கள் நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை இரவு வவுனியா பொது மருத்துவமனையில் இறைபதம் எய்தினார்.

மாரடைப்பு காரணமாக மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய உடல் நிலை மோசமாக இருந்த போதிலும், “ஐம் ஓகே” என்று தனக்கே உரிய பாணியில் தனனைப் பார்க்கச் சென்றவர்களிடம் கம்பீரமாகக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், அவருடைய உடல் நிலையை படிப்படியாகப் பலவீனமடையச் செய்து, காலன் அவரைக் கவர்ந்து சென்று விட்டான்.

ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, வலியுறுத்தி வந்த சிவபாலன் ஆசிரியர் அவர்கள், அதற்காகத் தன்னையே அர்ப்பணித்திருந்த சிறந்த கல்விமான் ஆவார். சிவபாலன் மாஸ்டர் என்றால், மாணவர்கள் மத்தியில் ஒரு பயமும், அதேநேரத்தில் ஒரு பற்றுடன் கூடிய பாசமும் பொங்கி வழிவதைக்காண முடியும்.

இவருடைய எண்ணற்ற மாணவர்கள் பலர் இன்று வாழ்க்கையிலும், சமூகத்திலும் நல்ல நிலையில் உயர்ந்து நிற்கின்றார்கள். அதற்கு அவருடைய ஆங்கிலக் கல்வி மீது அவருக்கிருந்த ஒரு இடையறாத பற்றும், மாணவர்களுக்குச் சிறந்த கல்வியூட்ட வேண்டும் என்ற ஆர்வமும் முக்கிய காரணங்களாகும்.

வவுனியா மாவட்டத்தின் புகழ்பூத்த குடும்பத்தில் உதித்த அவர் தனது சமூகத்திற்கு ஆற்றிய கல்விப் பணியின் மூலம் தமது குடும்பத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருடைய இழப்பு கல்வியுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவருடைய தந்தையார் மாமடு மணியத்தார் என்ற பெருமைக்குரிய பெயருக்குரியவர். அஞ்சல் அதிபராக, சிறந்த விவசாயியாக தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பெருமகனாவார்.

சிவபாலன் ஆசிரியர் வவுனியா மாவட்டத்தின் ஆங்கிலக் கல்விக்கு ஆற்றிய பெரும சேவை வரலாற்றில் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டியது.

ஐந்து சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இவர் மூன்றாவது மகனாவார். இவர், செல்வரட்னம், விஸ்வநாதன் நில அளவையாளர் (சவூதி), சிவானந்தன் (லண்டன்), சிவாம்பிகை லோகானந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனாவார்.

இவருக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவர் சிவரூபன் (யுஎன்டிபி கொழும்பு) மற்றவர் இளமைப் பருவத்திலேயே – 21 வயதில் அகால மரணமடைந்த சாந்தரூபன்.

ஆசிரியர் சிவபாலன் அவர்களின் இறுதிக்கிரியைகள் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் வவுனியா இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர்.

அவருடைய இழப்பினால் துயருற்றிருக்கும் கல்வி உலகத்தினர், மாணவர்கள், குடும்பத்தினர் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
மகன் சி.சிவரூபன் 0773444206

-நன்றி திரு.பொன்னையா மாணிக்கவாசகம்-