பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் புத்துணர்ச்சி பெறும்: சனத் ஜெயசூர்ய!!

303

Sanath-Jayasuriya-007

தீவிரவாத தாக்குதல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்ய, மீண்டும் பாகிஸ்தானில் முன்னணி கிரிக்கெட் அணிகள் சென்று விளையாடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையே தற்போது நடைபெற்று வரும் போட்டி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஜெயசூர்ய பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு, டிசம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பள்ளியையும், அங்குள்ள சூழ்நிலையையும் பார்வையிட்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானில் தற்போது அமைதி திரும்பி உள்ளது. பாகிஸ்தான் அமைதியை விரும் நாடு. இங்குள்ள மக்களும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து எந்த கவலையும் அடைய வேண்டியதில்லை. பொதுமக்கள் வாழ்க்கை இயல்பு நிலையில் உள்ளது. ஆகவே, வரும் காலங்களில் பாகிஸ்தான் அதிக அளவிலான சர்வதேச போட்டிகளை நடத்தும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் லாகூர் மைதானத்தில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வீரர்கள் வந்த பஸ் மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த தாக்குதலுக்குப் பிறகு எந்த அணியும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை. 6 வருடங்களுக்குப் பிறகு ஜிம்பாவே அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு t20 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்ற அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளை பாகிஸ்தான் வந்து விளையாட வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.