இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரகத்தை மாற்றிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

334

gty_kidney_transplant_wy_120605_mnகொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெர்ஹாம்பூர் பகுதியில் வைத்து ஐவரை இந்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 20 வயதுடைய கன்ஹு பெஹேரா என்ற இளைஞர் தனது சிறுநீரகத்தை 3.5 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து புகுல்பானி பகுதியின் சப் கலக்டர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கன்ஹு பெஹேராவின் சிறுநீரகம் மஹேந்திர பட்நாயக் என்பவருக்கு (குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்) மாற்றப்பட்டுள்ளது, என இது தொடர்பில் ஏ.டி.ஜீ.யான (குற்றப் பிரிவு ) பி.கே.சர்மா கூறினார்.

மேலும் இதில் சிறுநீரகத்தைப் பெற்றுக் கொண்டவரின் இரண்டு சகோதரர்கள், மனைவி மற்றும் மனைவியின் சகோதரருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் கன்ஹு பெஹேரா என்ற சிறுநீரகம் வழங்கிய இளைஞர், சிறுநீரகத்தைப் பெற்றவரான மஹேந்திர பட்நாயக்கின் தாயாரது வளர்ப்பு மகன் என போலி சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கன்ஹு பாஸ்போட்டை பெற்றுக் கொள்வதற்கும் போலி ஆவணங்களை வழங்கியுள்ளதாக சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மனித உறுப்புக்களை மாற்றம் செய்வது தொடர்பில் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில், அந்த நாட்டிலேயே அவர்கள் சிறுநீரகத்தை மாற்ற முயற்சித்த போதும் பல வைத்தியசாலைகளில் அது மறுக்கப்பட்டுள்ளது.

பின்னரே சந்தேகநபர்களால் இலங்கையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என, சர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.