குப்பி விளக்கில் படித்தாலும் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவன்!!

717

kath - Copy

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் சிறிதரன் நிகேதன் குப்பி விளக்கில் தனது கல்வியைத் தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா வடக்கில் முதல்நிலை பெற்று சாதித்துள்ளார்.

வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாகிய கற்குளம், சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசித்து வந்த நிகேதன் வீட்டில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வவுனியா வடக்கு வலயத்திற்குரிய புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்திலேயே கல்வி கற்றான்.

சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நிகேதன் போக்குவரத்து வசதிகளற்ற ஒழுங்கைகள் ஊடாக 2 கிலோமீற்றர் நடந்து சென்று, பின்னர் பேரூந்தில் 3 கிலோமீற்றர் தினமும் பயணித்தே படித்து வந்தான்.

இது தவிர, அவனது வீட்டிற்கு மின்சார வசதி கூட இன்னும் வழங்கப்படவில்லை. குப்பி விளக்கிலேயே தினமும் படித்து வந்தான். இவ்வாறான கஸ்ரங்களுக்கு மத்தியில் ரீயூசன் செல்லாது பாடசாலைப் படிப்பை மட்டுமே நம்பி, தற்போது வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா வடக்கு வலயத்தில் முதல் நிலையையும் மாவட்டத்தில் 5 ஆவது இடத்தைப் பெற்று அனைவரதும் கனத்தை ஈர்த்துள்ளான்.

இதேவேளை, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் சிலர் குறித்த மாணவனின் வீட்டிற்குச் சென்று அவனை ஊக்கப்படுத்தியதுடன் சிறு பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.

மாணவனின் போக்குவரத்துப் பிரச்சனையை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சரால் குறித்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்படவுள்ளது.

சாதிப்பதற்கு எதுவுமே தடையல்ல என்று நிரூபித்து மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இம் மாணவனுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றோம்.

kath kath1 kath2