வவுனியா செட்டிகுளத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல்!!

282

 
வவுனியா செட்டிகுளத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (29.04.2016) நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உரையாற்றுகையில்..

கடந்த 2½ வருடங்களில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது. வடக்கில் மக்களால் தெரிவுசெய்யப்ட்ட மாகாண சபை உருவாக்கப்பட்டு 2½ வருடங்கள் முடிவடைந்துள்ளது. கடந்த காலங்களில் சுகாதாரதுறையின் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.

யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் சுகாதார சேவையின் தேவையும் அதிகரித்துள்ளது. மாகாணசபைக்கு நிதிப்பற்றாக்குறை மற்றும் வேறுபல நிர்வாக சிக்கல்கள் உள்ளபோதும் மாகாண மத்திய அமைச்சுகளின் நிதியைகொண்டு முடிந்தவரை சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்துள்ளோம்.

குறிப்பாக சுதேச மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சித்தர்களாலும், முனிவர்களாலும் பயன்படுத்தப்பட்ட சித்தமருத்துவம் எமது பாரம்பரிய வைத்திய முறையாகும். இதனை அழியவிடாது பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும்.

இதனடிப்படையில் மேலைத்தேய மருத்துவத்திற்கு இணையாக சுதேச மருத்துவத் துறையையும் அபிவிருத்தி செய்துவருகின்றோம். சித்தமருத்துவத்தின் தலைநகராக கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் விளங்கும். இதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம்.

100 ஏக்கர் காணி கிளிநொச்சி கல்மடு நகரில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 ஏக்கரில் மூலிகைத்தோட்டமும், மிகுதியாகவுள்ள 25 ஏக்கரில் மூலிகை மருந்துகளைத் தயாரிக்கும் மருந்துத் தொழிற்சாலையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தவதற்கு தமிழ்நாடு சித்தமருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா, மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் திருமதி சி.துரைரட்னம், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் சந்திரமோகன், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6