
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் மாணவனை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் பயிலும் மாணவனை குறித்த பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதில் செவிப்பறை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தான்.
இந்நிலையில், மாணவனை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட அந்த பாடசாலையின் இரு ஆசிரியர்களும் மாணவனை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த இரு ஆசிரியர்களையும் கைது செய்து சாவகச்சேரி பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை குறித்த மாணவனைத் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





