வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – கொழும்பு பிராதான வீதியில் ஜயந்தியாய எனும் இடத்தில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஜயந்தியாய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறந்தவர்களில் இரண்டு பேர் பாடசாலை மாணவர்களாவர்.
ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் கரீம் கஸ்மீர் (வயது – 15), ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் 11ல் கல்வி பயிலும் சனூஸ் இம்தாத் (வயது – 16), நிஸ்தார் இஸ்பாக் (வயது – 19) என்ற மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், புஹாரி சியாம் (வயது – 26) என்பவர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகள் இன்று வியாழக்கிழமை பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் இடம் பெறவுள்ளதாகவும், அதனால் வெலிக்கந்தையில் உள்ள இரண்டு சடங்களும் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த நான்கு பேரும் தலைக்கவசம் அணியாமையும் அதிக வேகமுமே இம் மரணத்திற்கான காரணம் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.






