
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார்.மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உறவுக்காரர் எனவும், சிறுமியின் தாய் தந்தை காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையிலே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை புதன்கிழமை மாலையில் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





