
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின், முக்கிய தலைவர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்தை கண்டித்துள்ளனர்.இது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ள, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, இந்த நியமனத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜ் ராஜரத்தினம் எனும் நபருக்கு சொந்தமான நிறுவனமொன்றில் இந்திரஜித் குமாரசுவாமி ஆலோசகராக பணிபுரிந்ததாக விமல் வீரவன்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.எனவே, அவரை மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டதை கண்டிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கருத்துக்களை தெரிவித்த போது, பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட ஒரு நபரிடம் தேசிய பொருளாதாரத்தின் கேந்திர தானமாக கருதப்படும் மத்திய வங்கியை கையளிப்பதை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்தார்.இதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பிற்கும் அச்சறுத்தல் ஏற்படுமென்றும் அவர் எச்சரித்தார்.
இதிரஜித் குமாரசுவாமி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார ஒப்பந்தத்தை உருவாக்கும் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் ஒரு நபரென்று குற்றம்சாட்டிய உதய கம்மன்பில இந்த நியமனத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம், மேலும் ஆபத்தை சந்திக்குமென்றும் எச்சரித்தார் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.





