சுவாதி கொலையுண்டு கிடந்த போது உதவ ஒருத்தன் போகவில்லையே, அவர் இரத்தம் ஓடி வருவதை ரசித்துக் கொண்டிருக்கின்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என சீமான் கொதித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, இன்னும் சில ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்தும் தனிபெரும் முதலாளிகளின் சொத்தாகிவிடும்.
கடந்த 10 நாட்களில் 7 யானைகள் கொல்லப்பட்டுள்ளது. இரண்டு மருத்துவ கல்லூரி மாணவன் மாடியில் இருந்து நாய்க்குட்டியை தூக்கி போடுகிறான். இவன் படித்து வந்து என்ன மருத்துவம் பார்ப்பான்?
ஒரு நாய்க்குட்டியை மாடியில் இருந்து தூக்கி போடுகிற மனநிலை எப்படி ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும்.
சுவாதி என்ற தங்கை கொலை செய்யப்பட்டாள். கொலை செய்தவன் யார் என்று தெரியவில்லை. எங்கள் ஆட்சியின் வரைவில், பொது இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கருவி வைத்து கண்காணிக்கப்படும் என தெரிவித்திருந்தோம்.
தெரு தெருவாக கத்தினேன், ஒருத்தரும் கேட்கவில்லை, ஜெயலலிதாவிற்கு ஓட்டை போட்டீர்கள், இப்ப கழுத்தறுத்து கொண்டே போகிறான்.
இதில் எவனும் குற்றவாளி அல்ல, இந்த சமூகமே குற்றவாளி, மிக கேடு கெட்ட சமூகமாக மாறி நிற்க்கின்றது. செயல் என்பதும், சிந்தனை என்பதும் சமூகத்தின் விளைச்சல். இந்த நிலம் நஞ்சாக இருக்கின்றது, அதனால் விளைவதும் நஞ்சாக விளைகின்றது.
சுவாதி காதலிக்கவில்லை என கொன்று விட்டேன் என சொன்னால், அது என்னடா காதல், அன்பு கொலை செய்யுமா? காதல் கொலை செய்யுமா, நேசம் கொலை செய்யுமா இதுவா காதல்.
தொடர் வண்டி நிலையம் ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை வெட்டி போட்டுவிட்டான் ஒருத்தன், இரண்டு மணிநேரமாக இரத்த சகதியில் ஒரு பெண் கிடக்கிறாள், ஒருவன் கூட உதவ முன்வரவில்லையே,
எப்படி என்றால் இந்த சமூகம் கேடு கெட்ட சமூகமாக மாறியுள்ளது. ஒருத்தன் போகவில்லையே, அவர் இரத்தம் ஓடி வருவதை ரசித்துக் கொண்டிருக்கின்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என சீமான் கொதித்துள்ளார்.






