குழந்தைகளை குறிவைக்கும் போதை சொக்லேட் !!

630

189115-850x567-baby-and-chocolate-bar

குழந்தைகளுக்கு சொக்லேட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால், அது தானியங்களின் பக்கம்தான் திரும்பும்.

நமக்கு வேண்டுமானால் தங்க மோதிரம் பெரிதாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிக்கு தங்க மோதிரம் ஒரு பொருட்டே அல்ல; அதற்கு தேவை தானியம். அதுதான் அதற்கு உணவு.இதேபோல் தேவைகள், விருப்பங்கள் என்பது உயிரினங்களுக்கு இடையே மட்டுமின்றி, மனிதர்களுக்கு இடையேயும் மாறுபடக்கூடியது.குறிப்பாக வயதுக்கு ஏற்ப தேவைகளும், விருப்பங்களும் மாறுபடுகின்றன. 8 வயது சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று உனக்கு தேவையானதை வாங்கிக் கொள் என்றால், அவளுடைய முதல் தேர்வு சொக்லேட் ஆகத்தான் இருக்கும்.

ஏனெனில் சொக்லேட் குழந்தைகளின் விருப்பமான தின்பண்டம். சொக்லேட் பிடிக்காத சிறுவர்-சிறுமிகளே கிடையாது. இதனால்தான் உணவுப்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சொக்லேட் விதவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும், சுவைகளிலும் தயாரிக்கின்றன.



சொக்லேட் மீதான குழந்தைகளின் இந்த மோகத்தை சிலர் தங்கள் வியாபார உத்திக்காக தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.சொக்லேட்க ளில் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை கலந்து விற்பனை செய்து, சிறுவர்களை அதற்கு அடிமை ஆக்குகிறார்கள்; நாட்டின் வருங்கால தூண்களை நாசமாக்குகிறார்கள்.இந்த போதை சொக்லேட் விவகாரம் சமீபத்தில் இந்தியாவின் தமிழகத்தை உலுக்கி எடுத்துவிட்டது. பள்ளிக்கூட மாணவர்களை குறி வைத்தே இந்த வகை சொக்லேட் விற்கப்படுகின்றன.

சென்னை நகரில் சில பள்ளிக்கூடங்களின் அருகே உள்ள கடைகளில் கஞ்சா அல்லது போதை மருந்து கலந்த சாக்லெட்டுகள் விற்கப்பட்டதும், அவற்றை மாணவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததும் சமீபத்தில் அம்பலமானது.கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மூளை நரம்புகளை கடுமையாக பாதிக்கும். போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும்.

குழந்தைகள் நாட்டின் வருங்கால தூண்கள். அவர்கள் சொக்லேட் விரும்பி சாப்பிடுவதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கலந்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அரசாங்கம் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.

எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே நல்ல சத்தான தின்பண்டங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பவேண்டும். கூடுமானவரை சொக்லேட் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் அழுது அடம்பிடித்து கேட்கும்பட்சத்தில் நல்ல தரம்வாய்ந்த கம்பெனியின் சொக்லேட்களை வாங்கிக்கொடுங்கள். அவ்வாறு சொக்லேட் வாங்கும்போது தயாரிப்பு திகதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனமாக பார்த்து வாங்குங்கள். அதற்கும் மேலாக சொக்லேட் அதிக நிறமேற்றப்பட்டிருந்தால் அதை வாங்காதீர்கள்.அப்படி இல்லையெனில், அந்த சொக்லேட்டை நுகர்ந்து பார்க்கும்போது போதை பாக்கு வாசனை தெரியும். அதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றியெல்லாம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.