நான் முரளிதரனாக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன் : அர்ஜூன ரணதுங்க!!

495

Murali

நான் முரளிதரன் இடத்தில் இருந்திருந்தால் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று முன்னாள் இலங்கை தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனைஅவுஸ்திரேலிய அணி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

முரளிதரனின் இந்த முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்வதாக கிரிக்கெட் சபைத் தலைவர் சுமதிபால குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் இலங்கை தலைவர்களான சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோர் முரளிதரனுக்கு ஆதரவாக பேசினர்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனின் இந்த முடிவு சரியானது கிடையாது என்று இலங்கையின் முன்னாள் தலைவரும், துறைமுக மற்றும் கப்பல் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் முரளிதரன் இடத்தில் இருந்து கொண்டு இப்படி செய்திருக்க மாட்டேன். இருப்பினும் அவர் எடுத்த இந்த முடிவை பற்றி நான் ஏதும் கூற முடியாது.

அவர் கண்டிப்பாக அவுஸ்திரேலிய அணி வழங்கிய இந்த பயிற்சியாளர் பதவி வாய்ப்பை நிராகரித்திருக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.