நிறைவுக்கு வந்த அமலாபால் விவாகரத்து!!

487

Amala-vijay

இயக்குனர் விஜய்யும் அமலாபாலும் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனித்தனி வீடுகளில் வசிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அமலாபாலை விவகாரத்து செய்துவிட்டது குறித்து விஜய்யும், அவருடைய தந்தை அழகப்பனும் உறுதியாக கூறிவிட்டாலும், அதற்கான காரணத்தை அவர்கள் தெளிவாக கூறவில்லை.

இதற்கிடையில், பல்வேறு இணையதளங்களில் விஜய்-அமலாபால் பிரிவிற்கு இதுதான் காரணம், அதுதான் காரணம் என பலவகை காரணங்களை வைத்து எழுத ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இயக்குனர் விஜய்யே தான் அமலாபாலை பிரிவதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான் மிக அதிகம். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்.

நானும் அமலாவும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மைதான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது.
எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், ஒரு சில ஊடக நண்பர்களும் இதைப்பற்றி வெளிப்படையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாலும், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

ஒரு சராசரி தந்தையாக மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சனைகளால் நொந்துபோன என் தந்தை, தன் மனதில் சரி என்று பட்டதை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது, இந்த பிரச்சனையை திசை திருப்பியது.

இயல்பாகவே சமூதாயத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வெளியான ஒன்பது படங்களும், பெண்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வண்ணமாகத்தான் இருந்திருக்கிறது. அமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்திற்கு பிறகும் அவரின் விருப்பத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தேன்.

அப்படி இருக்கும்போது திருமணத்திற்குப் பின்னர் அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே.

நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில்கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்துவிட்டது.

மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு, எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்துவிட்டேன்.

இந்த உண்மை எதுவும் தெரியாமல், குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பும் வதந்திகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். அதை நினைக்கும்போதுதான் எனக்கு மேலும் வருத்தமாக இருக்கிறது. இனியாவது எங்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதித்து, இதுபோல் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடன் இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.