மோசமான வரிகளைக் கொண்ட பாடல்களை நான் பாட மாட்டேன். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடுவதற்குக் கூட நான் மறுத்திருக்கிறேன் என பொலிவூட் திரையுலகின் பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி தனது 43 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியவர் சோனு நிகம். இவ்வருடம் அவர் பாடிய 3 பாடல்கள் வெளியாகின. இம்மூன்று பாடல்களுமே இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.
இந்நிலையில் திரைப்படங்களில் ஏன் சொற்ப எண்ணிக்கையான பாடல்களை மாத்திரம் பாடுகிறீர்கள் என அவரிடம் வினவப்பட்டது. அக்கேள்விக்கு சோனு நிகம் பதிலளிக்கையில், “என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களில் பாடுவது அவ்வப்போதுதான். ஒவ்வொரு இசை நிறுவனமும் தமது கலைஞர்களின் பட்டியலை வைத்திருக்கின்றன.
அப்பாடகர்கள் தமது இசையமைப்பாளர்களுக்கு சிறந்த பாடல்களைக் கொடுக்க வேண்டும். இந்த ட்ரெண்ட்டை நாம் விமர்சிக்கவில்லை. தமது பாடகர்களால் ஒரு பாடலை பாட முடியாது என இசை தயாரிப்பாளர்கள் கருதினால் மாத்திரமே அவர்கள் என்னிடம் வருவார்கள்.
எனவே, சோனு நிகம் ஒரு வருடத்தில் தொடர்ச்சியாக 100 பாடல்களை பாட வேண்டும் என எதிர்பார்ப்பதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
தரக் குறைவான வரிகளைக் கொண்ட பாடல்கள் குறித்து சோனு நிகம் கூறுகையில், “மலிவான வரிகளைக் கொண்ட பாடல்களை பாட நான் விரும்பவில்லை. இதே காரணத்தால் 7 வருடங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடுவதற்குக்கூட நான் மறுப்புத் தெரிவித்துள்ளேன்.
ரோபோட் (2010) படத்தின் பாடலொன்றின் வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அப்பாடலை நான் பாடவில்லை. அவரும் (ரஹ்மான்) அப்பாடலில் பங்காற்றக் கூடாது என நான் கூறினேன்.
இதே போன்று மலிவான வரிகளைக் கொண்டிருந்ததால் ஹிமேஷ் ரேஷாமியாவின் இசையில் பாடுவதற்கும் நான் மறுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவீன தொழில்நுட்பமானது அனைவரையும் சிறந்த பாடகர்களாக்குவற்கு உதவுகிறது. ஆனால், மேடையில் பாடுவது ஒரு பாடகருக்கான கடும் பரீட்சைக் களமாக அமையும் எனவும் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.






