இனி நுவரெலியாவில் வௌி மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதியில்லை!!

802

v-radhakrishnan2017ம் ஆண்டுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற, வெளிமாவட்ட மாணவர்கள் எக் காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (08) கினிகத்தேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கல்வி நடவடிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி வேளையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, எம்.திலகராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது,

வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை காலப் பகுதியில் இறுதி நேரத்தில் பரீட்சை எழுதுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இம் முறைப்பாட்டுக்கு இணங்க அனுமதியை வழங்கிய பாடசாலை ஒன்றின் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிமாவட்ட மாணவர்கள் நுவரெலியாவில் பரீட்சை எழுதினாலும், மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட செட் புள்ளிகளே அவர்களுக்கு வழங்கப்படும். இருந்தும் பாரியளவில் பணம் செலவழித்து கொண்டு உல்லாச விடுதிகளில் தங்கியிருந்து பரீட்சை நடவடிக்கை கவனிக்கப்படுவதாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை மாகாண மற்றும் மாவட்ட கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் கல்வி இராஜாங்க அமைச்சின் கவனத்திற்கு விரைவில் கொண்டு வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.அத்தோடு, 2017ம் ஆண்டு முதல் க.பொ.த உயர் தர மற்றும் சாதாரண தர வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனுமதிகள் மறுக்கப்படும். அதேவேளை இந்த நிலை தொடரும் என்றால் எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்ட மாணவர்கள் கல்வி பெறுபேற்றில் வீழ்ச்சி அடைவதுடன், உயர் பதவிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் குறிக்கீட்டு கருத்து தெரிவித்தார்.

எனவே இவ் விடயம் தொடர்பில் கல்வி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சு மட்டத்தில் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலேசித்து தீர்கமான முடிவுகளை எடுக்கப்போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சபை நடவடிக்கையின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.