
கோயம்புத்தூரில் பரஷூட்டில் பறந்த தொழில் அதிபர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’ என்ற அமைப்பின் சார்பில் பரஷூட்டில்பறக்கும் ‘பாரா செயிலிங்’ என்ற வான் சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த சாகச விளையாட்டில் கலந்துகொள்பவர்களிடம் ரூ.500 வசூலிக்கப்பட்டது. இதில் கோவை பீளமேட்டை சேர்ந்த தொழில் அதிபர் மல்லேசுவரராவ்( 53) கலந்து கொண்டார்.அவரை பரஷூட்டொடு பெல்டில் இணைத்து பறக்கவிட்டனர். அவர் சுமார் 10 நிமிடம் வானில் பறந்தார். மல்லேசுவரராவ் பரஷூட்டில் பறந்ததை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் செல்போனில் படம் பிடித்தனர்.
அப்போது மல்லேசுவரராவ் திடீரென்று கூச்சல் போட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் பாராசூட்டில் இருந்து அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மல்லேசுவரராவ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சாகச விளையாட்டு குறித்து பீளமேடு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த விளையாட்டிற்கு முறையான அனுமதி வாங்கி இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மல்லேசுவரராவ் 70 அடி உயரத்தில் பறந்தபோது அவர் அணிந்திருந்த பாராசூட் ‘பெல்ட்’ கொக்கி கழன்றதால் கீழே விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





