அண்ணனே தங்கைக்கு செய்த கொடுமை!!

596

Kidnap

ஈரோட்டின் அந்தியூர் தாலுகாவை சேர்ந்தவர் சென்னிமலை, இவரது மகள் சசிகலா கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேசும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த மாதம் இருவரும் ஊரை விட்டு ஓடிவந்த சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் கடந்த மாதம் 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே சசிகலாவை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை பொலிசில் புகார் கொடுத்தார்.

இதனை அறிந்து கொண்ட தம்பதியினர் சசிகலா- ரமேஷ் பூந்தமல்லி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினர். இந்த தகவல் சசிகலாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் சென்னைக்கு வரவே பொலிசார் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் சசிகலா கணவர் ரமேசுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதுடன், திருவேற்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தன்னுடைய மகள் பிரிந்து போன துக்கம் தாங்காமல் அவரது தந்தை தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிகிறது, இந்நிலையில் இவருக்கு அதிகளவு சொத்து இருந்த காரணத்தால் சசிகலாவின் பெரியப்பா மகனான அத்தாணி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (32) சதித்திட்டம் தீட்டினார்.

இதற்காக ரமேஷ்- சசிகலாவை நோட்டமிட்ட நந்தகுமார், நான்கு பேருடன் சேர்ந்து சசிகலாவை கடத்தி சென்றார். இதனையடுத்து ரமேஷ், சசிகலாவை மர்மநபர்கள் கடத்தி சென்றனர் என திருவேற்காடு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து வேலூர் குற்றப்பிரிவு ஏ.டி. எஸ்.பி. உமா சங்கர் தலைமையில் மாவட்டம் முழுவதும் பொலிசார் உஷார்படுத்தப்பட்டனர்.

பொலிசாரின் சோதனையில் சசிகலா கடத்தப்பட்ட கார், பள்ளிகொண்டா சுங்கசாவடியை கடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் ஆம்பூர் பைபாஸ் சாலையில் கார் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உஷாரான பொலிசார் எடுத்த துரித நடவடிக்கையின் பேரில் காரை மடக்கி பிடித்ததுடன் சசிகலாவையும் மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட நந்தகுமார், காரை ஓட்டிச்சென்ற அந்தியூரை சேர்ந்த கருப்பண்ணன் (48), சித்தேஸ்வரன் (43), சந்தோஷ்குமார் (27), கணபதி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, காதலனுடன் சசிகலா ஓட்டம் பிடித்தது அவரது தந்தை உள்பட அனைவரையும் மிகவும் பாதித்தது.
சசிகலா பெயரில் அதிக சொத்தும் உள்ளது. சசிகலாவையும் இழந்து சொத்தையும் இழக்க அவர்கள் விரும்பவில்லை.

எனவே ரமேசிடம் இருந்து சசிகலாவை பிரித்து சொத்தை அபகரிக்க திட்டமிட்டு கடத்தினோம் என வாக்குமூலம் அளித்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.