நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்!!

756

Jothi Lakshmi

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார்.

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1963ல் எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்துப் பெண் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பூவும் பொட்டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆரின் ரிக்ஷாகாரன் படத்தில், பம்பை உடுக்கை கட்டி… என்ற பாடலுக்கும், அடிமைப்பெண் படத்தில் காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ… என்ற பாடலுக்கும் நடனமாடி உள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆருடன் நீரும் நெருப்பும், தேடிவந்த மாப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், விக்ரம், கார்த்தி உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.

இந்த நிலையில் ஜோதிலட்சுமிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டார். இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.