வடக்கு மக்கள் பூரணமாக விடுதலையடையவில்லை, சந்திரிகா!!

648

chandrika_bandaranayake
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லையென்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் புகுடாவுடன் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சந்திரிகா, அதன் பின்னர் அவரது யாழ்.விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் பொறிமுறைகளும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செய்துள்ளதென தான் நம்புவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் சந்திரிகா குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு பாதுகாப்பான சூழலையோ நல்லிணக்கத்தையோ ஏற்படுத்த முனையவில்லையென தெரிவித்த சந்திரிகா, தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை பலப்படுத்தி தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.