அதி நவீன செல்பேசிகளான ஸ்மார்ட் ஃபோன்களால் மூளையின் நினைவுத்திறன் பாதிக்கப்படுவதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Trend in Cognitive Sciences எனும் இதழில், மூளை செயற்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் சாம் கில்பர்ட் விளக்கமளித்துள்ளார்.
ஸ்மார்ட் ஃபோன்கள், மடிக்கணினிகள், கணினிகள் ஆகியவை நமது அன்றாடச் செயல்களை எளிதாக்குகின்றன. அவற்றின் உதவியுடன் தேவையான தகவல்களை உடனடியாகத் தேடித் தெரிந்துகொள்ள முடிகிறது.
இவற்றின் வரவால் பலவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவை நமக்கு இல்லாமற்போனது. இதனால் மூளை தேவையில்லாமல் பல பணிகளை செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமற்போனது.
இதன் மூலம் மூளையின் செயற்திறன் ஏராளமாக சேமிக்கப்படுகிறது. இவ்வாறு செயற்திறன் சேமிக்கப்படுவதால், மூளையின் நினைவுத்திறன் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், நவீன சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் நினைவுத்திறன் குறைந்துவிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எனவே, ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட நவீன சாதனங்களின் உதவியுடன் மூளையின் வேலைச்சுமையைக் குறைக்கும் அதே நேரத்தில், அது நமது நினைவுத்திறனை எந்த அளவு பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என சாம் கில்பர்ட் குறிப்பிட்டுள்ளார்.