திரைப்படங்களில் நடிக்க வந்த புதிதில் அடுத்த மாத வீட்டு வாடகையை எப்படி செலுத்துவது எனத் தெரியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை தான் எதிர்கொண்ட தாக பொலிவூட் நடிகை ஈஷா குப்தா கூறியுள்ளார்.
ஈஷா குப்தா டில்லியைச் சேர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகுராணியாகத் தெரிவானார். 2012 ஆம் ஆண்டு ஜெனட் 2 எனும் திரைப்படத்தின் மூலம் பொலிவூட் நடிகையாக அறிமுகமானார்.
திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பைக்கு சென்ற புதிதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். “அப்போது, அடுத்த மாத வாடகையை எப்படி செலுத்தப் போகிறேன் எனத் தெரியாமல் இருந்தது. உங்கள் திரைப்படங்கள் தோல்வியடைந்தால் யாரும் உங்களைத் தேட மாட்டார்கள்.
உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பொன்று கிடைக்காது. எனக்கு கோட்பாதர் எவரும் இல்லை. எனது ஒரே பாதர் (தந்தை) சினிமா தொழிற்றுறையை சாராதவர்” என ஈஷா குப்தா கூறியுள்ளார்.
அத்துடன், எனக்கு பின்புலமாக எவரும் இல்லாததால் நான் மிகக் கடுமையாக பாடுபட்டு பணியாற்றினேன். அதுவும் ஒரு நல்ல விடயம் தான். ஏனெனில், நான் இந்த நிலைக்கு உயர்ந்தமைக்கு எவரையும் காரணமாகக் கூறத் தேவையில்லை.
இதை சிலர் தவறாகக் கருதலாம். ஆனால், இது உண்மை. என்னை நடிகையாக்கியமைக்கு யாரையும் காரணமாகக் கூற முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஜெனட் 2 படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் முகேஷ் பட் உட்பட பலருக்கு நன்றி கூற தான் கடமைப்பட்டுள்ளதாகவும் ஈஷா குப்தா கூறியுள்ளார்.
30 வயதான ஈஷா குப்தா அண்மையில் வெளியான ரஷ்டம் திரைப்படத்தில் அக் ஷய் குமார், இலியானா ஆகியோருடன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






