இணையத்தள கதைகளில் வரும் திகில் பாத்திரமான ஸ்லெண்டர் மேனை (Slender Man) மகிழ்விப்பதற்காக, தனது வகுப்பிலுள்ள 12 வயது சிறுமியை கத்தியால் குத்திய இரு சிறுமிகள் தொடர்பான வழக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது.
விஸ்கொன்ஸின் மாநிலத்தைச் சேர்ந்த மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகிய இரு சிறுமிகளே தனது வகுப்பிலிருந்த மற்றொரு மாணவியைக் கத்தியால் குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியை இவர்கள் இருவரும் 19 தடவைகள் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், மேற்படி மாணவி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். 2014 மே மாதம் இச்சம்பவம் இடம்பெற்றது.
குறித்த மாணவியை அவளின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக தம்முடன் வருமாறு அழைத்த பின் இக்குற்றச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி, விஸ்கொன்ஸின் மாநிலத்தின் வவ்கேஷா நகரில் பற்றைகளுக்கு இடையிலிருந்து சைக்கிளோட்டி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். அவரின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டன.
இம்சம்பவம் தொடர்பாக மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். குறித்த மாணவியை தாம் கத்தியால் குத்தியமைக்கு மோர்கன் கேய்ஸரும் அனீஷா வேயரும் கூறிய காரணம் பலருக்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்லெண்டர் மேன் எனும் இணையத்தள திகில் பாத்திரத்தை மகிழ்விப்பதற்காக இந்நடவடிக்கையை தாம் மேற்கொண்டதாக இவ்விருவரும் கூறினர்.
அம்மாணவியை கொலை செய்வதற்கு சில மாதங்களாக இவ்விருவரும் திட்டம் தீட்டியமை பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்தது.
அதையடுத்து, மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகியோர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தற்போது 14 வயதான இவ்விருவரும் சிறார்களாக அல்லாமல், வளர்ந்தோராக கருதப்பட்டு வழக்கு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வழக்கில் தான் நிரபராதி என கடந்த வருடம் அனீஷா கூறினார். இந்நிலையில் மற்றொருவரான மோர்க்கென் கேய்ஸரும் தான் நிரபராதி என கடந்த வாரம் தெரித்துள்ளார். மனநலன் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் தான் நிரபராதி என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் மனநலன் பாதிக்கப்பட்டவரா என்பதை கண்டறியவதற்கு இரு மருத்துவர்களை நீதிபதி நியமித்துள்ளார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
ஸ்லெண்டர் மேன் (Slender Man) என்பது இணையத்தள திகில் கதைகளில் வரும் ஒரு கற்பனைப் பாத்திரமாகும். மிக அதிகமான உயரமும் மெல்லிய உடலமைப்பும் கொண்ட கோட், சூட் அணிந்ததாக இப்பாத்திரம் சித்திரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த எரிக் நட்சன் என்பவர் இப்பாத்திரத்தை உருவாக்கினார். 2009 ஆம் ஆண்டு முதல் தடவையாக இப்பாத்திரம் இணையத்தில் தோன்றியது.
மனிதர்களை குறிப்பாக சிறார்களை பின்தொடர்வது, கடத்துவது, அச்சுறுத்தும் ஒரு நபராக திகில் கதைகளில் இப்பாத்திரம் சித்திரிக்கப்படுகிறது.







