ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியொன்றில் நடுவர்கள் அளித்த தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக வீரர் ஒருவரின் பயிற்றுநர்கள் தமது மேலாடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் கடந்த ஞாற்றுக் கிழமை இடம்பெற்றது.
மொங்கோலிய வீரர்களின் பயிற்றுநர்கள் இருவரே இவ்வாறு விநோத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளான ஞாயிறன்று நடைபெற்ற, 65 கிலோகிராம் எடைக்குட்பட்டவர்களுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியொன்றில் உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் நவ்ருஸோவும் மற்றும் மொங்கோலிய வீரர் மன்தக்னரன் கன்ஸோரிக்கும் மோதினர்.
இப் போட்டியின் இறுதிக் கட்டத்தில், மொங்கோலியாவின் மன்தக்னரன் கன்ஸோரிக் முன்னிலையில் இருந்தார். அவர் உற்சாக நடனத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், நடுவர்கள் 7 – 7 என புள்ளிகளை மறு சீரமைத்தனர்.
அதன்பின் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு மற்றொரு புள்ளி அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிராக மொங்கோலிய வீரர் தெரிவித்த ஆட்சேபம் நிராகரிக் கப்பட்டது.
இப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நவ்ருஸோவ் வெற்றி பெற்றார்.
இதனால், மொங்கோலிய வீரரின் பயிற்றுநர்கள் இருவரும் அரங்கிலேயே தமது மேலாடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஓர் எதிர்ப்பு நடவடிக்கை, நடுவர்களின் செயற்பாட்டில் பிரச்சினைகள் உள்ளன என மேற்படி பயிற்றுநர்களில் ஒருவரான பியாம்பரென்சின் பயாரா தெரிவித்தார்.









