இலங்கைத் தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கின்றது : இயக்குனர் சேரன்!!

460

Seran1

“கன்னா பின்னா” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் இலங்கைத் தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கின்றது என்று தெரிவித்தமை தமிழர்கள் மத்தியில் சர்சையைக் கிளப்பியுள்ளது.

இவ் விழாவில் இயக்குனர் சேரன் பேசும்போது..

இப் படத்தின் தயாரிப்பாளர் சிவா, நான் கதாநாயகனாக நடிக்கும்போது எனக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி கொடுத்தவர். இப் படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் நடிகராகவும் மாறி இருக்கின்றார்.
என்னுடைய ராசி என்னவென்றால், எனக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி கொடுத்தவர்கள் எல்லோரும் கதாநாயகன் ஆகிவிடுகின்றார்கள். நடிகர் ஆரி எனக்கு பயிற்சி கொடுத்தவர் தான். இப்போது கதாநாயகன் ஆகிவிட்டார். அதேபோலத்தான் இவரும். நடிகராகிவிட்டார்.

சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. கபாலி போன்ற திரைப்படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது தொலைக்காட்சியான இருக்கட்டும், இணையமாக இருக்கட்டும். ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்கக் கூடாது. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோகக் கூடாது.

தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கின்ற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கின்றார்கள். நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கின்றது.

தமிழ் தமிழன் என்று நாம் சொல்லும்போது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுகின்றது. ஆனால் அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றான். இந்த மாதிரி திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் வெளியிடுகிறவர்கள் இலங்கை த் தமிழர்கள் என்று சொல்கின்றார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கின்றோம். எங்களுடைய பல விடயங்களை இழந்து அவர்களுக்காக போராடி இருக்கின்றோம்.

ஆனால் அதைச்சார்ந்த சிலர் தான் இதைச் செய்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றபோது, ஏண்டா இவர்களுக்காக இதை செய்தோம் என அருவருப்பாக இருக்கிறது என பேசினார்.

இவரது பேச்சுக்கு பலர் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களையும் பிழையாக சித்தரிப்பது எவ்வாறு சரியாகும் என்று விசனம் வெளியிட்டு வருகின்றனர்.