ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் (Trent Bridge) நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக, இதுவரை 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி குவித்த 443 ஓட்டங்களே இருந்தது.
இந்தநிலையில் இன்று இங்கிலாந்து பெற்ற 444 ஓட்டங்களில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத் தொடரில், ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இன்றைய போட்டியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், அதிரடியாக ஆடி 171 ஓட்டங்களையும், பட்லர், ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், ஜோ ரூட் 85 ஓட்டங்களையும் விளாசினர். இதன்படி இந்தப் 445 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
445 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42. ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்று 169 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.






