தனுஷ் தயாரிப்பில் ரஜனி நடிக்கும் திரைப்படம்!!

430

Rajani

ரஜினி அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது குறித்து கோலிவுட்டில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், பா.ரஞ்சித் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பது மட்டும் பரபரப்பு செய்தியாக பரவி வந்தது. விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களை வைத்து அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், பா.ரஞ்சித் தரப்பிலிருந்து தான் யாருக்கும் கதை சொல்லவில்லை என்றும், தற்போது தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று தனுஷ், ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘2.ஓ’ படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாகவும், அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கப்போவதாகவும் அறிவித்தார்.

‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போட்டு வரும் நிலையில், மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய படம் உருவாவது ரஜினி இரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினி ‘2.ஓ’ படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்பது பிறகுதான் தெரியவரும். மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.