விற்பனை செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களிலும் விபத்தொன்றின் போது பாதிக்கப்படக் கூடிய இடங்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதான கீழ் காட்டப்பட்டுள்ள படத்தில் போன்ற விஞ்ஞான ரீதியான படவிளக்கத்தைக் காட்சிப்படுத்தல், நேற்று முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க விடுத்த அறிக்கையொன்றில், கொள்வனவு செய்யும் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தில் பாதுகாப்பற்ற பகுதிகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விற்பனையாளர்கள் தலைக் கவசத்தை விற்பனை செய்யும் போது, தலைக்கவசம் உரிய தரத்தில் இருத்தல், இளம் வர்ண தலைக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம், பாரிய விபத்தொன்றின் பின்னர் தலைகவசத்தின் பாதுகாப்பு தன்மையில் ஏற்படும் குறைபாடு, தலைக்கவசத்தின் நீண்டகால பாவனையின் பின்னர் தளர்வு ஏற்படுமாயின் அதனை அணிவதை தவிர்த்தல், தலைக்கவசத்திலுள்ள பாதுகாப்பு பட்டியினை தாடையுடன் இணைத்து அணிவதனால், தாடைக்கு ஏற்பட கூடிய பாதுகாப்பு என்பன தொடர்பில் கொள்வனவாளர்களுக்கு கட்டாயம் தெளிவூட்டவும் அறிவூட்டவும் வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் விபத்தினால் முகத்தில் ஏற்படக் கூடிய காயங்களுக்கு நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதுடன் அதற்காக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் இலங்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.







