தமிழகம்- கர்நாடகா மத்தியில் மிகப்பெரிய பஞ்சாயத்தாக இருக்கும் காவேரி நதி நீர் பிரச்சனை பற்றி தனக்கு அவ்வளவாக தெரியாது என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் மகளிர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த அவர் மேலும் கூறுகையில், விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் படும் பிரச்சனைகள் என எதையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மெளனம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
காவேரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாதது குறித்து தனக்கு அவ்வளவாக தெரியாத என கூறிய நக்மா, சென்னையில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது கர்நாடகா அரசு உதவி செய்ததாக குறிப்பிட்டார்.
அப்படியெல்லாம் உதவி செய்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் என்றும், அதை பற்றி முழுமையாக அம்மாநில அரசு தான் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






