சம்சுங் கலக்ஸி நோட்7 செல்பேசியை இந்திய விமானங்களில் பயன்படுத்தத் தடை!!

959

NEW YORK, NY - AUGUST 13:  Guests demo the new Galaxy S6 edge+ and Galaxy Note5 at Samsung Unpacked 2015 on August 13, 2015 in New York City.  (Photo by Ilya S. Savenok/Getty Images for Samsung)

 

புதிய சம்சுங் கலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.

பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கனவே விதித்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும்போது, சம்சுங் கலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூட்டம் ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

பயணிகள் எடுத்துச்செல்லும் பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

மின்னூட்டம் அளிக்கும்போது அல்லது அதற்கு பின்னர் இந்த செல்பேசி வெடித்து எரிந்து விடுவதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், விற்பனை செய்த அனைத்து செல்பேசிகளையும் திரும்பப் பெறுவதாக சம்சுங் நிறுவனம் அறிவித்தது.

மேலும் ஜப்பான், கான்டாஸ் மற்றும் வெர்ஜின் அவுஸ்திரேலிய விமான நிறுவனங்களும் விமானத்தில் பயணிக்கின்றபோது இந்த செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தியாவின் தடை குறித்து, சம்சுங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சம்சுங் கலக்ஸி நோட் 7 செல்பேசி விற்பனை தொடங்கப்படவில்லை என்றும் சம்சுங் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான கவனங்களை போக்குவதற்காகவே இந்தியாவில் விற்பனையை தள்ளிப்போட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கக்கூடிய வகையில், மிக விரைவாக கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை புதிதாக அனுப்ப இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வெளியான இந்த செல்பேசி வாடிக்கையாளர்களிடம் பொதுவாக மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதுவரை 25 இலட்சம் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள், உலக அளவில் விற்பனையாகியுள்ளன.