இந்தியாவிலிருந்து 90 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!!

1140

srilankan-refugees-return-from-india_ci-720x480

யுத்த வடுக்களை சுமந்தபடி நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களில் சுமார் 90 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வசதிப்படுத்தலின் கீழ் இவர்கள் தாயகம் திரும்புவதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

45 ஆண்களும், 45 பெண்களும் தங்களின் சுய விருப்பின் பேரில் நாடு திரும்புவதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

திருச்சியிலிருந்து 54 அகதிகள், இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 132 இலக்க விமானத்தில் இன்று நாடு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 36 அகதிகள் சென்னையிலிருந்து யூ.எல். – 122 இல்க விமானத்தினூடாக இன்று நண்பகல் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

நாடு திரும்பும் அகதிகளுக்கு இலவச விமான பயணச் சீட்டு வழங்கப்படுவதுடன், வாழ்வாதாரத்திற்கான தேவையான ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்படுவதாக மீள்குடிறே்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அகதிகளின் சொத்துக்கள் அழிவடைந்திருப்பின் அதனை உரிய முறையில் மீள பெற்றுக் கொடுப்பதற்கும் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையை அடுத்து, தமிழகத்திலிருந்து 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரையான காலப்பகுதிக்குள் 4945 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிலுள்ள 150 அகதிகள் முகாம்களில் 65000 இற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வாழ்வதுடன், பலர் தங்களின் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.