இரு மகன்களும் கடலில் மூழ்கி மரணம் : பிரிவைத் தாங்க முடியாத பெற்றோர் தற்கொலை!!

617

dead

கடலில் குளிக்கச்சென்ற தமது பிள்ளைகள் இருவரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன தகவலை கேள்வியுற்ற  பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்குடா கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குறித்த இளைஞர்களின் பெற்றோர்களான சண்முகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த 20 வயதான சண்முகம் சதீஸ்குமார் மற்றும் 18 வயதான அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் ஆகிய இரு இளைஞர்களும் கடலில் குளிக்கச் சென்ற நிலையில் காணமால்போயுள்ளனர்.

அவர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய மேலும் இரண்டு இளைஞர்களை பிரதேச மீனவர்களும் பொலிஸாரும் மீட்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் நீரில் மூழ்கி காணாமல் போன ஏனைய இரண்டு இளைஞர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலம் தற்கொலை செய்துகொண்டுள்ள பெற்றோரது மூத்த புதல்வரான சதீஷ்குமாரது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டாவது மகனது சடலத்தை தேடும் பணியில் கல்குடா கடற்படையினர் மற்றும் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1