பிரிட்டனில் வசிக்கும் இந்திய பெண்ணொருவர் தனது கடையில் கத்திமுனையில் கொள்ளையிடுவதற்கு வந்த நபரை, தான் தேநீர் அருந்தி முடிக்கும் வரை காத்திருக்குமாறு கூறியதுடன் பின்னர் அந் நபரை பயமுறுத்தி துரத்தியுள்ளார்.
49 வயதான கரம்ஜித் சங்கா எனும் இந்த பஞ்சாபி பெண், பிரிட்டனின் ஹுல் நகரில் கடையொன்றை நடத்துகிறார். அண்மையில் அவரின் கடைக்கு வந்த ஸ்டுவர்ட் கிளீசன் எனும் நபர் 7 அங்குல நீளமான கத்தியொன்றைக் காட்டி அச்சுறுத்தி பணம் கொடுக்குமாறு மிரட்டினார்.
ஆனால், கரம்ஜித் சங்கா அஞ்சவில்லை. மாறாக தான் தேநீர் அருந்தி முடிக்கும்வரை காத்திருக்குமாறு ஸ்டுவர்ட் கிளீசனுக்கு கரம்ஜித் உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஹுல் கிரவுண் நீதிமன்றில் நடைபெற்றது.
இவ் வழக்கில் சாட்சியமளித்த கரம்ஜித் சங்கா கூறுகையில், “அந் நபர் கடையிலுள்ள பணம் முழுவதையும் தருமாறு கூறினார். ஆனால், நான் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினேன்.
தேநீர் கப்பை கீழே வைத்துவிட்டு பணத்தை எடுத்தத் தருமாறு அவர் கேட்டார். நான் “சரி” எனக் கூறிவிட்டு, கத்தியொன்றை எடுத்துக் காட்டினேன். அதைக் கண்டு அந் நபர் ஓடிவிட்டார்.
அவரை நான் கத்தியால் குத்தியிருக்கப் போவதில்லை, எனினும், அவரை மிரட்டுவதற்கு அந் நடவடிக்கை போதுமானதாக இருந்தது” என்றார்.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டுவர்ட் கிளீசனுக்கு 5 வருட கால சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.








