பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் சரத்குமார். சினிமா, அரசியல், சமூகப் பணிகள் என்று எப் போதுமே தன்னை எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டு சித்தெறும்பு மாதிரி சுறுசுறுவென இருப்பார்.
மகளுக்கு திருமணம் முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வில் ரிலாக்ஸாக இருந்தவரிடம் ரொம்பநாளா சினிமாவில் காணோமே என்று கேட்டதற்கு,
“உண்மைதான். பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கெப் விழுந்திடிச்சி. அரசியலில் எந்தளவுக்கு தீவிரமா இருக்கேனோ, அதே அளவு சினிமாவிலும் இருக்கணும்னு நினைக்கிறேன்.
எனக்கு அடையாளம் கொடுத்த துறை இதுதான். இப்பவும் வாரத்துக்கு ஒருத்தராவது வந்து என்னிடம் கதை சொல்லிட்டு போறாங்க. வாழ்க்கையில் உயர்வு, தாழ்வெல்லாம் சகஜம். அரசனிலிருந்து ஆண்டி வரைக்கும் அப்படிதான். சைக்கிள்ல ஒரு பெடல் மேலே போறப்போ இன்னொண்ணு இறங்கினாதான் வண்டி ஓடும்.
நான் கொஞ்ச நாள் சைக்கிளே ஓட்டாம இறங்கிட்டேன். இப்போ மறுபடியும் வந்துட்டேன். முன்னைவிட வேகமா சைக்கிள் ஓட்டப் போறேன். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து முழுவீச்சில் நடிக்கப் போறேன்.
இப்போ ஜி.வி.பிரகாஷோடு இணைந்து ‘அடங்காதே’ படத்தில் நடிக்கிறேன். சண்முகம் முத்துசாமி டைரக்ஷன். தம்பி ராமையா, மந்த்ரா பேடியெல்லாம் நடிக்கிறாங்க. தாடி, மீசை கெட்டப்பில் வர்றேன்.
இளம் தலைமுறை நடிகர்களோடு இணைந்து நடிப்பது டபுள் உற்சாகத்தை கொடுக்குது. கன்னடத்தில் புனித்ராஜ்குமாரோடு இணைந்து ‘ராஜகுமாரா’ன்னு ஒரு படம் பண்ணியிருக்கேன்.
அது ரிலீஸ் ஆகப்போவுது. கன்னடத்தில் நானே சொந்தக்குரலில் பேசி நடிக்கிறேன். எந்த மொழியில் நடிச்சாலும் என்னோட குரலிலேயே பேசணும்னுதான் முயற்சிப்பேன். சொந்தப் படம் ஒண்ணும் எடுக்க பேசிக்கிட்டிருக்கேன். அதுதவிர்த்து வேறு சில அதிரடியான அறிவிப்புகள் வரும். என்கிறார்.
ரஜினியுடன் 2.0 படத்தில் நடிக்க சரத்குமார் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அது பற்றி கேட்டபோது “அக்ஷய்குமாரை அழைப்பதற்கு முன்பாக ஷங்கர் என்னைத்தான் அழைத்தார்.
‘சூரியன்’ படம் எடுத்த காலத்திலிருந்தே இருபத்தைந்து ஆண்டு காலமா அவர் எனக்கு நண்பர்தான். நடிக்க மறுத்தேன்னு சொல்லக்கூடாது. வெளிப்படையா சொல்ல முடியாத சில காரணங்களால் என்னால் அதில் பங்கேற்க முடியலைன்னுதான் சொல்லணும்.
ஒரு வேலை விடயமா லண்டன் வரை போயிருந்தேன். அங்கே ரஜினி இருந்தார். மரியாதை நிமித்தமா சந்திச்சி பேசினேன். ஏற்கனவே ‘கோச்சடையான்’ படத்துக்காக அவரோடு பணியாற்றி இருக்கிறேன். மீண்டும் இருவரும் சேர்ந்து வேலை பார்க்கிறதை குறித்து பேசினோம் என்கிறார்.






