3ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 57 வயது ஆசிரியரை புதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை பாகூர் அருகே உள்ள இருளஞ்சந்தை கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் அரிகிருஷ்ணன் (57). இவர் கடந்த புதனன்று வகுப்பறையில் தனிமையில் இருந்த 3ம் வகுப்பு மாணாவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகின்றது.
அவரிடம் இருந்து தப்பித்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அச்சிறுமியின் பெற்றோர் ஆசிரியரின் கீழ்த்தரமான நடவடிக்கை குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள் நீதி வேண்டி திடீரென பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் அரிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆசிரியர் அரிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி பொது மக்கள் வலியுருத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
தலைமறைவான அரிராஜனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கல்வி துறை அலுவலகத்துக்கு பணி இடமாற்றம் கோரி ரகசியமாக விண்ணப்பிக்க வந்த அரிராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.