மெக்ஸிகோவில் பாரிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோல் மற்றும் டீசல் தாங்கிகள் வெடித்துள்ளன.
பர்கோஸ் என்ற கப்பலானது, கோட்ஸாகோல்கோஸ் துறைமுகத்திலிருந்து வெராகுருஸ் துறைமுகம் நோக்கி டீசல் மற்றும் பெட்ரோல் பீப்பாய்களுடன் மெக்ஸிகோவினூடாக சென்று கொண்டிருந்த போது, வெராகுருஸ் மாநிலத்திலுள்ள போக்கா டெல் ரியோ கடலோரப் பகுதியில் குறித்த கப்பலில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்தது. இதனையடுத்து கப்பலிலிருந்த பணியாளர்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும், கப்பலிலிருந்த 70 ஆயிரம் பீப்பாய்களில் பெற்றோலும், 80 ஆயிரம் பீப்பாய்களில் டீஸலும் வெடித்துள்ளதால் கப்பலின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
அதிலிருந்த 31 பணியாளர்களும் அவசர உதவி படகுகள் மூலம் கப்பலிலிருந்து வெளியேறினர்.
ஏற்கனவே, பெற்றோலிய மசகு எண்ணெய் விலை சரிவால் கடும் இழப்பை சந்தித்துவரும் பெமெக்ஸ் பெற்றோலிய நிறுவனம், அடுத்தடுத்து ஏற்பட்ட சில விபத்துகளால் பெரும் நஷ்டமடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந் நிறுவனத்துக்கு சொந்தமான பெற்றோலிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.








