குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தையும், ஆட்பதிவு திணைக்களத்தையும் பத்தரமுல்ல சுஹுருபாய கட்டடத்தில் புதிதாக ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.
குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளின் பிரச்சினை இன்று மேற்குலக நாடுகளில் இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கிறது. இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை புறந்தள்ளுவதற்காக புதிய திட்டம் அமுலாக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகள் மற்றும் ஆட்பதிவு தொடர்பான சவால்கள் பற்றி பேசுவதற்கு உரிய அதிகாரிகளை பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்குப் பெறச் செய்யப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்களுக்கு செயற்றிறன் வாய்ந்த ரீதியில் ஆக்கப்பூர்வமான சேவையை வழங்க வழி வகுக்கும் வகையில் சுஹுருபாய கட்டடத் தொகுதி சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு சேவையாற்றும் நிறுவனங்களில் நிலவும் குறைபாடுகள் மக்களையே பாதிக்குமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களை தாமதித்தேனும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.