சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20). இன்று அதிகாலையில் சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
பின்னர் வீட்டில் இருந்து நகை-பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதற்கிடையே தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சடலத்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் நகை- பணத்துக்காக தாய்-மகளை கொன்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.