
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து
பதில்: கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை.
ஆனால் விஸ்வரூபம் எடுப்பவர்களையும் தலைவராகக் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும், தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட அஸ்திரம் அது.
எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள் பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால் உனக்கு அது என்ன லாபமா என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று கருத்து கூறியுள்ளார்.
கேள்வி: நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?
பதில்: நடிகர்கள் மட்டுமல்ல வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.
இது ஜனநாயக நாடு. இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.





