ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க தேவையான கூடிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யோன் க்ளோட் யோன்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ்சில் பார்ளிமெண்ட் மாளிகையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே யோன்கர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு இணைந்து ஏற்படுத்தியுள்ள இணக்க அரசாங்கத்தின் ஊடாக இலங்கை சரியான திசையில் நோக்கி சென்றுக்கொண்டுள்ளது எனவும் யோன்கர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை வெகுவாக பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நல்லாட்சியை மிகவும் சரியான மற்றும் உரிய முறையில் முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் ஐரோப்பிய சமூகத்திடம் மாத்திரமல்லது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை இலங்கை வென்றெடுக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.