காதலியை திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் மற்றும் நண்பர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (27).
இவர் அப் பகுதியில் ஆட்டோ மற்றும் வேன் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வேனில் நாகர்கோவிலிலுள்ள கல்லூரியில் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அடிக்கடி பயணம் செய்துள்ளார்.
இதனால், அந்த மாணவிக்கும் சுரேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதற்கிடையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பி மாணவியும் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.
இதனையடுத்து இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் நாகர்கோவில் சென்றபோது, அங்கு இரவில் தங்க இடமில்லாததால், சுரேஷின் நண்பர் தினேஷ் மற்றும் கோபால் ஆகியோர் வடசேரி பகுதியிலுள்ள விடுதியில் அறை எடுத்து கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் அன்றிரவு ஒன்றாக தங்கியுள்ளனர். அடுத்த நாள் காலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கூறி மாணவியின் நகைகளை வாங்கியுள்ளார்.
அதனை அடகு வைத்து தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறி வெளியே சென்றுள்ளார் தினேஷ். இதனையடுத்து அந்த விடுதிக்குள் அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரும் சென்றுள்ளனர்.
சுரேஷின் காதலி தனியாக இருந்தபோது அவரது நண்பர்கள் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். இதற்கிடையே சுரேஷின் இன்னொரு நண்பரும், விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவருமான ஞானபிரவினும் சுரேஷின் காதலியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தான் மாணவிக்கு, காதலனே தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷின் காதலி சுரேஷ் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில் கடந்த 13ஆம் திகதி முதல் இம்மாணவி திடீரென மாயமானதை அடுத்து, அவர் காணாமல் போய்விட்டதாக மாணவியின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் பல இடங்களில் மாணவியை தேடியுள்ளனர். ஆனால், மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந் நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியிலுள்ள ஒரு விடுதியில் இளம் பெண்ணும், சில இளைஞர்களும் தகராறு செய்வதாக வடசேரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்த போதுதான் மாயமான மாணவி இவர்தான் என தெரிய வந்தது.
பின்னர் மாணவி அளித்த முறைப்பாட்டின் பேரில் வேன் சாரதி சுரேஷ், அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் மற்றும் ஞானபிரவின் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் மாணவியின் காதலன் சுரேஷ், கோபால், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.






